

ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (45). தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோதி (43) தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கோபிநாத் (22) மேட்டுகடையில் ஒரு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நடராஜன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிநாத் இருந்துள்ளார். அப்போது அவரை தேடி மூன்று வாலிபர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் கோபிநாதிடம் பொருளையும் வாங்கி கொடுக்கவில்லை, அதற்காக பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் கோபிநாத் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களுடன் சென்று விட்டார். பின்னர் கோபிநாத் வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு நள்ளிரவு 1.30 மணிக்கு மீண்டும் கோபிநாத் வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் பிறகு மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்கவே மகன் வந்து விட்டான் என நினைத்து ஜன்னல் வழியாக அவரது தாயார் ஜோதி பார்த்து உள்ளார்.
அப்போது வெளியே நின்று இருந்த மூன்று நபர்கள் உன் மகனையும் உங்களையும் விட மாட்டோம் என்று கூறி தீ பற்ற வைத்த பெட்ரோல் பாட்டிலை வீசி உள்ளனர். ஜன்னலில் பட்டு பாட்டில் உடைந்து சிதறியதில் ஜோதியின் முகம் கழுத்தில் தீ பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஈரோடு பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜேக் என்கிற நவீன் (21), ஈரோடு உழவன் நகர் என்ஜிஜி ஓ காலனி சேர்ந்த ஜீவானந்தம் (21), மற்றும் 17 வயது சிறுவன் என மூன்று பேரை கைது செய்தனர். கைதான வாலிபர்கள் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் ஈரோடு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.