

கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
"கரியவன் கருணையில் பெரியவன்
இறைவடிவங்களில்
பன்முகத்தன்மை கொண்ட
பரந்தாமன்
கண்களால் பேசும்
காதலன்
கானமிசைப்பதில்
வேங்குழல் வேந்தன்
வெண்ணெய் மட்டுமல்ல
உடையையும் திருடும்
உன்னதன்
கோபியருடன்
குலாவுவான்
ஆழ்நிலை தியானத்தில்
அமர்ந்திருப்பான்
சமர்த்தன் சமாதான முயற்சியில் சதுரன்
வியூகம் வகுப்பதில்
வித்தகன்
நலிந்த குசேலனுக்கு
நல்ல தோழன்
போர்க்களத்தில்
அஸ்திரம் விடுத்து
அண்டங்களை
அதிரச்செய்தவன்
சரணடைந்தவளை
சடுதியில் காத்தவன்
போர்க்களத்தில் புலம்பிய
அர்ஜூனனுக்கு
அச்சம் நீக்கி அருங்கீதை
அருளிய அச்சுதன்
காந்தாரி கடிந்த
சாபங்களை
அன்புடன் ஏற்ற
அருளாளன்
இப்படி எல்லா
நிலைகளிலும்
ஏகமாய் பொருந்தும்
இறைவடிவம்
இவன் ஒருவனே!
பிறந்தநாள் முதல்
பெரும் போராட்டம்
ஆயினும்
கடைசி நாள் வரை
கடமையில் நின்றவன்
எந்த சூழ்நிலையையும்
எதிர்கொண்டு
கிட்டிய பணியை
கீர்த்தியாய் செய்வதேயென்ற
கிருஷ்ணனின் வாழ்வே
கீதை தான்!"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.