

திருப்பூர், ஏ.பி.டி., ரோடு, இந்திரா நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் ஸ்ரீஹரி. தனியார் கல்லூரி இரண்டாமாண்டு மாணவர். நேற்று மதியம், ஸ்ரீஹரி தன் வீட்டருகே நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவன் போலீசரிடம் வாக்குமூலமாக கூறியதாவது:-
நான் காதர் பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்துச் சென்ற ஸ்ரீஹரியுடன் பள்ளியில் படிக்கும் போதே எனக்குப் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினோம். இந்த நிலையில், ஸ்ரீஹரி தன்னிடம் ஒரு செல்போன் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் போவதாகவும் என்னிடம் கூறினார். உடனே நான் அதை வாங்க முடிவு செய்து, ரூ.8,000 கொடுத்து அந்த செல்போனை வாங்கினேன்.
செல்போனை வாங்கி சிறிது நேரத்திலேயே அதில் பழுது இருப்பது எனக்குத் தெரியவந்தது. ஆசை ஆசையாகத் தாயிடம் அடம் பிடித்துப் பணம் வாங்கி வாங்கிய செல்போனில் பழுது இருந்ததால் எனக்குப் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து எனது தாயிடம் கூறினேன்; அவரும், 'ஸ்ரீஹரியிடம் கொடுத்து சரிசெய்து தரச் சொல் அல்லது செல்போனைத் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கி வா' எனக் கூறினார்.
நானும் ஸ்ரீஹரியைச் சந்தித்து, 'செல்லில் பழுது உள்ளது, இதை சரிசெய்து கொடு அல்லது பணத்தைத் திருப்பி கொடுத்துவிடு' எனக் கேட்டேன். அவரும், 'சரி, நான் பணத்தைத் திருப்பி கொடுத்து விடுகிறேன்' எனக் கூறி செல்போனை வாங்கிக் கொண்டார். ஆனால், நீண்ட நாட்களாகியும் பணத்தையும் தரவில்லை, செல்போனையும் தரவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று நான் பணத்தைக் கேட்டபோது, எனது தாயைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, என்னைச் தலையில் அடித்து 'இங்கே வராதே' என்று விரட்டி அடித்தான். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவனை உயிரோடு விடக்கூடாது என நினைத்தேன்.
நேற்று வீட்டிலிருந்து வெளியே வரும் வழியில் ஒரு கடையில் மீன் வெட்டும் கத்தி ஒன்றை புதிதாக வாங்கினேன். நேராக ஸ்ரீஹரியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் வெளியே ஒரு மரத்தடியில் தனியாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பணத்தைக் கேட்டேன். அப்போது அவர், 'ஒரு வாரத்தில் தருகிறேன்' என்று என்னை மிரட்டும் தொனியில் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன் இவ்வாறு அந்த சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.