

வீடு தீப்பற்றி எரிந்ததுடன் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்பாச்சிபட்டி கிராமத்தில் கஞ்சா போதையில் சில வாலிபர்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த வாலிபர் ஒருவர் அவரது தாயிடம் பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததால் அவரது குடிசை வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதில் வீடு தீப்பற்றி எரிந்ததுடன் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், போதையில் இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களில் 2 பேரை போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குளித்தலை-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு போதையில் வந்து தொல்லை கொடுப்பதுடன், அச்சுறுத்தி வருகிறார்.
எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். மேலும் இப்பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தில் 3 வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.