தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகுமா முரசு புயல்?- தமிழகத்தை தாக்குமா?- வானிலை மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
Published on: 
Summary

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தை தாக்காது, ஆந்திராவை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருவதால் வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

சூப்பர் எல் நினோ

இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ பாதிப்பு இருப்பதால் பருவமழை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தொடர்ந்து மிக கனமழை அல்லது அதி கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதால் இதுவரையில் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ள நிலையில் அது மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் மழை பொழிவையும் பரவலாக கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்து வலுப்பெற்று புயலாக உருவாகி கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது:-

மிக கனமழை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை

நாளை கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் கனமழை பெய்யக்கூடும்.

27-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

புயலாக மாற வாய்ப்பு

இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும். அது தொடர்ந்து படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யக் கூடும். இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இல்லை. ஆந்திராவை நோக்கி நகர்வதற்கான சூழல் நிலவுகிறது.

இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளை கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலின் தாக்கம் தமிழகத்திற்கு இருக்க வாய்ப்பில்லை.

தாழ்வு பகுதி உருவான பிறகு தான் அடுத்தடுத்த நகர்வுகளை கணிக்க முடியும். தற்போதைய நிலையில் அதன் நகர்வு பற்றி முழுமையாக தெரிவிக்க இயலாது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முரசு

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு முரசு என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய வானிலை மையம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் சொல்லான முரசு என இந்தப் புயலுக்கு பெயர் சூட்டப்படும். இது அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com