மனைவியை அடித்துக் கொன்று உடலை எரித்த கணவர் கைது

பலத்த காயம் அடைந்த சிவகாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
மனைவியை அடித்துக் கொன்று உடலை எரித்த கணவர் கைது
Published on: 
Summary

விசாரணையில் ரவிச்சந்திரன் குடும்பத் தகராறில் தனது மனைவியை அடித்து கொலை செய்ததும், யாருக்கும் தெரியாமல் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்ததும் தெரியவந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது34). பெயிண்டர்.

காதல் திருமணம்

இவர், சிவகாமி (30) என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சமாதானமாகி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், மனைவி சிவகாமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

அடித்து கொலை

இதில் பலத்த காயம் அடைந்த சிவகாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அவர் இறந்ததற்கான எந்த தடயமும் வீட்டில் இல்லாதபடி ரவிச்சந்திரன் பார்த்து கொண்டார். வீட்டில் ஆங்காங்கே படிந்திருந்த ரத்தக்கறை எல்லாவற்றையும் அவர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.

தனது மனைவி இறந்த தகவலை அக்கம்பக்கத்தினருக்கோ, கிராம மக்களுக்கோ தெரிவிக்காமல், யாருக்கும் தெரியாமல், இரவு நேரத்தில் வாகனம் ஒன்றை வரவழைத்து சிவகாமியின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

உடல் எரிப்பு

பின்னர் அங்கு வைத்து யாருக்கும் தெரியாமல் உடலை எரித்துள்ளனர். இந்த நிலையில், சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள், இங்கு எந்த இறப்பும் நடக்கவில்லை. பின்னர் எப்படி சுடுகாட்டில் பிணம் எரியூட்டப்படுகிறது என சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து கிராம உதவியாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக தாசில்தாருக்கு இந்த தகவலை தெரிவிக்க, அவர் சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்திரிய கவின், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நள்ளிரவு சம்பவ இட த்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கணவர் கைது

விசாரணையில் ரவிச்சந்திரன் குடும்பத் தகராறில் தனது மனைவியை அடித்து கொலை செய்ததும், யாருக்கும் தெரியாமல் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்ததும் தெரியவந்தது. மேலும், உடலை எரிக்க ரவிசந்திரனின் தந்தை தனது விறகு கடையில் இருந்து விறகு எடுத்து வந்து கொ டுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து போலீசார் ரவிசந்திரன் மற்றும் அவரது தந்தையை தேடினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரனின் தந்தையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X