ரூ.400 கோடி முறைகேட்டில் யார்-யாருக்கு தொடர்பு?- அன்பில் மகேஷிடம் தீவிர விசாரணை

தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ரூ.400 கோடி முறைகேட்டில் யார்-யாருக்கு தொடர்பு?- அன்பில் மகேஷிடம் தீவிர விசாரணை
Published on: 
Summary

தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியான அரசகுமார் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில் கடந்த 26 -ந்தேதி இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

போலீஸ் காவல்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் 3 நாட்கள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தனியார் பள்ளிகளிடம் இருந்து யார் யார் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டது? இந்த பணம் யார் யாருக்கு கைமாறப்பட்டது?

என்பது போன்ற கோணங்களில் பல்வேறு கேள்விகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷிடம் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக அவர் அளித்த பதில்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். அன்பில் மகேஷிடம் திரட்டி வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி விட்டு உள்ளனர்.

சிக்கல்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்த விவகாரத்தில் பலர் இடைத்தரவுகளாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் யார் யார் என்பது குறித்தும் இந்த பணம் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்பட்டு படிப்படியாக கைமாறி கடைசியாக யாரை சென்றடைந்தது என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவிலேயே இந்த வழக்கில் அன்பில் மகேசை தாண்டி பலரும் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளையுடன் முடிகிறது

அன்பில் மகேஷின் போலீஸ் காவல் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர். இதன் பிறகு அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டுள்ள மனு மீது விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு

நேற்று மாலையில் இருந்து அன்பில் மகேசிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இரவில் அவர் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அன்பில் மகேசிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை போலீசார் மறுத்து உள்ளனர். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசிடம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எந்த கைதியாக இருந்தாலும் அவரை போலீஸ் காவவில் நன்றாக தூங்குவதற்கு அனுமதிப்பது வழக்கம். அதன்படியே அன்பில் மகேஷ் நன்றாக தூங்குவதற்கு நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவரிடம் மீண்டும் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறோம். நாளை 3-வது நாள் விசாரணை முடிந்து மாலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

X