

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்ட தாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர்.
இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இதுகுறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பத்தில் நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார்?
இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.
எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.