

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.
தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிடடுள்ளார்.