

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு ஆகிய 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய கட்டிடத்துக்கு போதுமான இடம் உள்ளதா, போக்குவரத்து வசதி எப்படி உள்ளது, எதிர்காலத்தில் மேலும் கட்டிடங்களை அமைக்க இடம் கிடைக்குமா, சுற்றுச்சூழல் மற்றும் சட்டப் பிரச்சனைகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்தின் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடலோரப் பகுதி என்பதால், கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அடையாறு முகத்துவாரம் அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் இதன் அருகில் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.
கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதால், இந்த பகுதியும் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது. சர்தார் படேல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அருகில் உள்ளன. ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதிகளும் இருப்பதால், சென்னையின் பல பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்ல முடியும். ஆனால் கிண்டி ஏற்கெனவே பரபரப்பான பகுதியாக உள்ளது. சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, கிங்ஸ் ஆஸ்பத்திரி, கவர்னர் மாளிகை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. கிண்டி ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் மற்றும் முக்கிய சாலைகள் காரணமாக ஏற்கெனவே அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது.
நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையம் அருகில் இருப்பதும், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து எளிதாக வந்து செல்ல முடிவதும் இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். நந்தம்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதற்கான பின்டெக் சிட்டி திட்டமும் இப்பகுதியில் உருவாகி வருகிறது. எனவே இங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் உருவாகும் புதிய பொருளாதார மையத்துடன் அது எவ்வாறு இணைந்து செயல்படும் என்பதும், ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதும் ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளது.
கோயம்பேட்டில் உள்ள பழைய புறநகர் பேருந்து நிலையப் பகுதி சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் சென்னையின் பல பகுதிகளுடன் உள்ள சாலை இணைப்பு ஆகியவை இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். ஆனால் கோயம்பேடு ஏற்கெனவே சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் வணிகப் பகுதிகள் காரணமாக இங்கு எப்போதும் அதிகமான போக்குவரத்து காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கூடுதல் வாகனப் போக்குவரத்தை சமாளிப்பது சவாலாக இருக்கலாம். மேலும் பழைய பேருந்து நிலையப் பகுதியை எதிர்காலத்தில் வேறு வகையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் நிலத்தின் அளவு மட்டும் முக்கியம் இல்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் கடலோரப் பிரச்சனை, கிண்டியில் போக்குவரத்து நெரிசல், நந்தம்பாக்கத்தில் ஏற்கெனவே உள்ள வளர்ச்சித் திட்டங்கள், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து என ஒவ்வொரு இடத்திலும் சாதகமும், சவாலும் உள்ளன. இந்த 4 இடங்களைத் தவிர கூடுதல் இடங்களும் பரிசீலிக்கப்படலாம். இறுதி இடம் குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை எந்த இடமும் உறுதி செய்யப்பட்டதாக கூற முடியாது.