மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி? அண்ணாமலை கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தலை ஒட்டி பிரசாரம் நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
annamalai
Published on: 

அண்ணாமலை கண்டனம்

தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிர்சாரம் செய்ய முதலமைச்சர் விஜய் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது

ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?

மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com