

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு, கடந்த மே 13-ந்தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைக் கோரிய மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்தார்.
இதை ஏற்று சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்ததை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை. கொறடா உத்தரவை மீறியதன் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள், தாமாக முன்வந்து தங்கள் பதவியை துறந்து விடுகின்றனர். அவர்களின் மன்னிப்பை ஏற்று, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது, அரசியல் சாசன கேலிக்கூத்து என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த பிரச்னை கட்சிக்கும், உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்னை. பொதுச்செயலாளர் மன்னித்து விட்டதால் அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இதுசம்பந்தமாக மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை மன்னித்து விட்டதால், அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. மனுதாரர் மூன்றாம் நபர். கட்சி வழக்கு தாக்கல் செய்யவில்லை.
சட்டப்படி 15 நாட்களில் மன்னித்து, தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதை சபாநாயகர் ஏற்றுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. தற்போதைய நிலையில் எந்த கட்சித்தாவல் நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவித்தனர்.
பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.