

சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.
அவையில் முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில்,
"பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் உறுப்பினர்கள் வைத்த கருத்துக்கள் பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றத்தில் சிக்கக்கூடிய இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே காப்பாற்றக்கூடிய சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்பதும் ஊழலற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
கருத்துரிமை, பேச்சுரிமை என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக
அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும் பெண்களையும் தரம் தாழ்ந்து பேசுவது வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடுகிறது. வன்ம நதியாக ஓடுகிறது. இதை மக்கள் பார்க்கிறார்கள்.
பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம் வீட்டில் இருப்பதும் அதே பெண்கள் தான் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.
மக்கள் எனக்கு இதற்கு முன் கொடுத்த இடமும், தற்போது கொடுத்த இடமும் கிடைக்க காரணம் நம் வீட்டு பெண்கள் தான். எனவே பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே சட்டசபையில் இதே எதிர்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விபட்டியிருக்கிறோம். எனவே வருங்காலத்தில் பெண்களுக்கு அதுபோல நடந்துவிட கூடாது." என தெரிவித்தார்.