செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்தது

சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 350 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்தது
Published on: 
Summary

குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் மற்றும் புழல், சோழவரம், பூண்டி ஏரிகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தாலும் வரும் நாட்களில் சென்னையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வினியோகம் செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னையின் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கோடைகாலத்திலும் கடல் போல் நீர் நிறைந்து காணப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி

ஏரியின் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமாக 24 அடியில் 13.53 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 1,275 மில்லியன் கன அடிதண்ணீர் இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 35 சதவீதம் ஆகும்.

குடிநீர் தட்டுப்பாடு

சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 350 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக தினமும் 130 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் மற்றும் புழல், சோழவரம், பூண்டி ஏரிகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தாலும் வரும் நாட்களில் சென்னையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வினியோகம் செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஏரிகளில் தண்ணீர் நிறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர் வாரிய அதிகாரி

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 4 அடி வரை சென்றாலும் ஏரியில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்கமுடியும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து அதற்கு ஏற்ப குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com