

கொத்தனாரை தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு ரத்தக்கரை படிந்த கத்தியுடன் நடந்தே சென்று போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது49). விவசாயி.
மேலும் கொத்தனாராகவும் வேலை பார்த்து வந்தார். கதிர்வேலுக்கு லீலா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(46). விவசாயி. கதிர்வேல் மற்றும் பொன்னுசாமிக்கு அந்த பகுதியில் சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளது.
இருவரின் விவசாய நிலமும் அருகருகே இருப்பதால், நிலப்பிரச்சினை சம்பந்தமாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை கதிர்வேல் வழக்கம் போல வயலுக்கு சென்றார். அப்போது பொன்னுசாமியும் வயலில் இருந்துள்ளார்.
அங்கு வைத்து 2 பேருக்கும் இடையே மீண்டும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி 2 பேரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பொன்னுசாமி திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கதிர்வேலை தலையில் சரமாரியாக வெட்டினார்.
இதில் நிலைகுலைந்த கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் பொன்னுசாமி அங்கிருந்து, கதிர்வேலை வெட்ட பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த கத்தியுடன் ஊருக்குள் நடந்து சென்றார்.
கத்தியில் ரத்தமாக இருந்ததை பார்த்த ஊர் மக்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான், கதிர்வேலை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியான மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் பெரிய வடவாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதற்குள் பொன்னுசாமி மங்கலம்பேட்டை பள்ளிப்பட்டு டாஸ்மாக் கடை வரை நடந்து சென்று விட்டார்.
வழியில் போலீஸ் வருவதை பார்த்த பொன்னுசாமி, நேராக சென்று போலீசாரிடம் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொத்தனாரை தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு ரத்தக்கரை படிந்த கத்தியுடன் நடந்தே சென்று போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.