

இவ்வூர் மக்கள் காலம் காலமாக இந்த சிற்பத்தை கொற்றவை என வழிபட்டு வருகின்றனர். பொதுவாக கிராமங்களில் ஏரிக்கரை, வயல்வெளி, ஆறு, ஓடைகள் போன்ற நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக மூத்ததேவி வழிபடப்பட்டாள்.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள கொரலூர் இருளர் குடியிருப்பு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் பண்ருட்டி இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ராகுல், முதுகலை ஆய்வு மாணவர்கள் செந்தமிழ்ச்செல்வன், தமிழரசன் மற்றும் செஞ்சி இரங்க பூபதி கல்லூரி மாணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு பலகைக்கல்லில் மூத்ததேவி சிற்பமும், குளத்திற்குள் உடைந்த நிலையில் விநாயகர் சிற்பமும் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பண்ருட்டி இம்மானுவேல் கூறியதாவது:-
கொரலூரில் கண்டறியப்பட்ட மூத்ததேவி சிற்பம் பெரிய பலகைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தை சேர்ந்த 1200 ஆண்டுகள் பழமையான சிற்பமாகும். கண்டெடுக்கப்பட்ட சிற்பம் 3½ அடி உயரமும் 2½ அடி அகலமும் கொண்டதாகும்.
மூத்ததேவியின் தலையில் கரண்ட மகுடமும், காதில் மகர குண்டலமும், கழுத்தில் சரப்பளி என்ற கழுத்தணியும் உள்ளது. அவரது வலது புறத்தில் மகன் மாந்தன் ரிஷப முகத்துடனும், இடது புறத்தில் மகள் மாந்தினியும் உள்ளனர்.
மூத்ததேவியின் சின்னமான காக்கை வலது பக்க மேல் பகுதியிலும், துடப்பம் இடது பக்க மேல் பகுதியிலும் உள்ளது. வலது கரம் பணிப்பெண்ணின் தலையில் வைத்தவாறும், இடது கரம் தொடை மீது வைத்தவாறும் பீடத்தில் அமர்ந்துள்ளார். இரு கால்களிலும் தண்டைகள் காட்டப்பட்டுள்ளன.
இவ்வூர் மக்கள் காலம் காலமாக இந்த சிற்பத்தை கொற்றவை என வழிபட்டு வருகின்றனர். பொதுவாக கிராமங்களில் ஏரிக்கரை, வயல்வெளி, ஆறு, ஓடைகள் போன்ற நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக மூத்ததேவி வழிபடப்பட்டாள். லட்சுமிக்கு முன் தோன்றியவள் என்பதால் மூத்ததேவி, மூத்தாள் என அழைக்கப்படுகிறது. வடமொழியில் ஜேஷ்டா தேவி எனப்படுகிறது.
காகத்தை கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டவள். 15-ம் நூற்றாண்டு வரை இவ்வழிபாடு இருந்து பின்னர் மறைந்துவிட்டது. குளத்தின் உள்ளே கண்டறியப்பட்ட விநாயகர் சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இடக்காலை மடக்கி வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ளது. சிற்பம் சிதைந்த நிலையில் உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.