

ஊருக்கு நடுவே கொடும்பாவி தயார் செய்து, கொடும்பாவி சாகணும், பெரும்மழை பெய்யணும் என ஒப்பாரி பாடியபடி தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்ட கொடும்பாவியை ஊருக்கு வெளியே வைத்து எரித்தோம்.
கோவை மாவட்டம் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆழியாறு அணை பாசனம், கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி சாகுபடியில் நெல், கரும்பு, தக்காளி, வாழை, தென்னை ஆகியவை பயிரிடப் படுகிறது. இந்தாண்டு ஆனைமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய மழையில்லாத காலங்களில் மழை பொழிய வேண்டி மக்களால் பல்வேறு சடங்குகள் இன்றளவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி மழை வேண்டி ஆனைமலை அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் கிராம மக்கள் மழை சடங்கான கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்து வழிபட முடிவு செய்தனர்.
இதற்காக தயார் செய்யப்பட்ட கொடும்பாவி உருவபொம்மையை ஆண்களும், பெண்களும் இணைந்து ஒப்பாரி பாடியபடி ஊர் முழுவதும் சுற்றி வந்து சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று எரித்தனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பயிர்களும், கால்நடைகளும் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் கூட்டம் நடத்தப்பட்டு, கிராமப் புறங்களில் நடைபெறும் மழை சடங்கான வறட்சி அரக்கன் கொடும்பாவியை எரித்து வழிபட தீர்மானிக்கப் பட்டது.
அதன்படி ஊருக்கு நடுவே கொடும்பாவி தயார் செய்து, கொடும்பாவி சாகணும், பெரும்மழை பெய்யணும் என ஒப்பாரி பாடியபடி தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்ட கொடும்பாவியை ஊருக்கு வெளியே வைத்து எரித்தோம். இதனால் விரைவில் மழை வரும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.