விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி

எம்எல்ஏ மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
Kanimozhi
Published on

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.

உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.

விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com