முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது

மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
Published on

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்.

திமுக கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசும்போது, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு வருமாறு:-

முதலமைச்சர் விஜய்

விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள்.

சட்டமன்றத்தில் உங்கள் அப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எப்படி பேச முடிகிறது. சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம் . நாங்கள் கோமாளி பயல்கள் என்று நினைக்கிறீர்களா?

எலும்பை உடைப்போம்

சட்டமன்றத்தை கூட்டும்போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும். கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.

விளாத்திகுளம் சிறுமி

கொத்து பரோட்டா போட போறாராம், உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.

விளாத்திகுளத்தில் சிறுமி கற்பழிக்கப்பட்டு உயிரிழந்தார். அது தேர்தலில் எதிரொலித்ததால் எங்களுடைய அமைச்சர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை.

பாதுகாப்பு இல்லை

இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 2000 ரூபாய் காசு வாங்கி விட்டதாக அய்யரை பிடிக்கிறார்கள். பழனியில் 100 கோடி ரூபாய் சொத்தை எழுதிக் கொடுக்கிறாங்க. இப்படிப்பட்டவர்கள் தான் அமைச்சர்களாக உள்ளனர்.

எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. த.வெ.க.வினர் அவரை கடுமையாக விமர்ச்சித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டார்கள்.

3 பிரிவுகளில் வழக்கு

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார்.

அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மார்க்கண்டேயன் கைது

இதைத்தொடர்ந்து இன்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். பின்னர், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இந்த தகவல் பரவியதும், ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு திரண்டனர். அவர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, எம்.எல்.ஏ.வை பாதுகாப்புடன் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க.வினர் தர்ணா

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் திரள தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததால் எஸ்.பி. அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி, பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டபோது அவர்களை போலீசார் தடுத்தனர். இதைத்

தொடர்ந்து, தி.மு.க.வினர் எஸ்.பி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தி.மு.க. நிர்வாகிகள், நாங்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை பார்க்க செல்ல வேண்டும். காலையில் அவரை கைது செய்த பின்னர் இதுவரை அவரது நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்களை மட்டுமாவது உள்ளே அனுமதித்து மார்க்கண்டேயனை பார்க்க செய்ய வேண்டும் என தி.மு.க.வினர் ஆவேசமாக கூறினர். அதற்கு போலீசார் வக்கீல்களை மட்டும் அனுமதிப்போம். மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com