குமரி மாவட்டத்திற்கு ரெயில்வே திட்டங்கள், புதிய ரெயில் சேவைகள், ரெயில் நிறுத்தங்கள்- விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரெயில் பாதைத் திட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்படாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விஜய் வசந்த் எம்பி- தெற்கு ரெயில்வே பொது மேலாளர் சுப்பாராவ்
Published on: 
Summary

கன்னியாகுமரி மாவட்டத்தின் ரெயில்வே மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம் முன்வைத்த விஜய் வசந்த் எம்.பி., புதிய ரெயில் சேவைகள், கூடுதல் நிறுத்தங்கள், நிலுவையில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டகால ரெயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், இன்று சென்னையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் அவர்களை சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

முன்னுரிமை

கன்னியாகுமரி மாவட்டத்தின் ரெயில்வே உட்கட்டமைப்பு மேம்பாடு, நிலுவையில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டுமானம், விவசாயத்திற்கான நீர்வழிகளைப் பாதுகாத்தல், புதிய ரெயில் சேவைகள், ரெயில் நீட்டிப்புகள் மற்றும் முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். மாவட்டத்தின் ரெயில் பயணிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரெயில் பாதைத் திட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்படாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், இணைப்புச் சாலைகள், விவசாயத்திற்கான நீர்வழிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த ரெயில்வே சார்பில் சிறப்பு நிலம் கையகப்படுத்தும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கோரினார்.

கூடுதல் நிறுத்தங்கள்

மேலும், மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இரணியல் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை மக்கள் தேவைக்கு ஏற்ப விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பார்வதிபுரம் மேம்பாலம், அகஸ்தீஸ்வரம் மேம்பாலம் ஆகியவற்றை குறிப்பிட்டு, கண்டன்விளை மேம்பால பணிகளையும் விரைவில் தொடங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான பயணிகள் தேவை அதிகரித்து வருவதையும், நாகர்கோவில் - சென்னை வழித்தடம் இந்திய ரெயில்வேக்கு குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டித் தருவதையும் சுட்டிக்காட்டிய விஜய் வசந்த் எம்.பி, இந்த தடங்களில் அதிக ரெயில்கள் இயக்க வேண்டும் எனவும், வேளாங்கண்ணிக்கு தினசரி ரெயில் தேவை என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். மேலும் மங்களூர் செல்ல இரவு ரெயில், ஐதராபாத் ரெயில் சேவை, திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே ரெயில்கள் ஆகியவை கோரிக்கையாக வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பயணிகள் நீண்ட தூரம் பயணித்து ரெயில் நிலையங்களை அடைய வேண்டிய நிலையைத் தவிர்க்கவும், ரெயில் சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கவும் பின்வரும் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி சூப்பர்ஃபாஸ்ட் விரைவு ரெயிலுக்கு இரணியலில் நிறுத்தம், நாகர்கோவில்- மங்களூரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், விவேக் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு குழித்துறையில் நிறுத்தம் வழங்குதல். புனலூர் விரைவு ரெயில் மற்றும் கோட்டயம் விரைவு ரெயில் ஆகியவற்றுக்கு குழித்துறை மேற்கு நிலையத்தில் நிறுத்தம் வழங்குதல் ஆகியவை வலியுறுத்தப்பட்டது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, நிலுவையில் உள்ள பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டத்தை வகுத்து விரைவாக நிறைவேற்ற தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com