தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், அமைதி பேரணி

காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டு வருகிறார்.
vijay vasanth
Published on: 
Summary

கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ள சிராயன்குழி சந்திப்பில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், அமைதி பேரணியும் நடந்தது.

சமூக நீதியைப் பாதுகாக்கவும், தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவிவிலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டமும், காந்தி பிறந்தநாள் விழா, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் உள்ளிட்ட முப்பெரும் விழா மற்றும் காந்தி ஜெயந்தி அமைதி பாதயாத்திரையும் சிராயன்குழி சந்திப்பிலிருந்து தொடங்கியது.

protest

இந்த நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமை தாங்கினார். விளவங்காடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காந்தி ஜெயந்தி பாதயாத்திரையானது சிராயன்குழி சந்திப்பில் இருந்து தொடங்கி காஞ்சிரகோடு, பம்மம், மார்த்தாண்டம் வழி குழித்துறை சந்திப்பு வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் SSA 2 மேற்பார்வையாளர் மதுரை ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங், பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், ஆஸ்கர் பிரடி, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், வட்டார தலைவர்கள் ரவிசங்கர், ரகுபதி, விஜயகுமார், வினுட்ராய், ஜெபா, பால்ராஜ், கிங்ஸிலி சாலமன், குழித்துறை நகர தலைவர் சுரேஷ், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஸ்டா, குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவிசங்கர் மற்றும் கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது:

குமரி மேற்கு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாதயாத்திரையை சிறப்பாக நடத்தி உள்ளீர்கள். இந்த பெருமை உங்கள் அனைவருக்கும் சேரும்.

எழுச்சி மிகுந்த இந்த காங்கிரஸ் கட்சி 2029-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டு பணியாற்றுவோம்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் செயல்படுவதோடு, பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி பிற அமைப்புகளுடன் சேர்ந்து நமது ஓட்டு உரிமைகளைப் பறித்து அவர்களுக்கு சாதகமாக ஆட்சி அமைவதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது. எனவே தேர்தல் ஆணையர் பதவி விலகவேண்டும் என அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com