மாதந்தோறும் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டம்

கட்சியில் புதிதாக இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.
மாதந்தோறும் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டம்
Published on

சென்னை:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மாதம் 27-ந் தேதி விக்கரவாண்டி வி சாலையில் நடத்தினார்.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதுடன் மாநாட்டு மேடையில் விஜய் தனது முதல் அரசியல் பேச்சை அதிரடியாக பேசி அரசியல் அரங்கை அதிர வைத்தார்.

கட்சி கொள்கை, திட்டங்கள் திராவிட அரசியல் இரு மொழி கொள்கை மற்றும் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை அவரது பாணியில் விஜய் பேசியது தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி (ஞாயிறு) அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தியதுடன் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் வெளியிடுவேன் என்றார். முதல் மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்து வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டினீர்கள். அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

செயற்குழு கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். 2-வது கட்டமாக நடந்து வரும் படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் தொடர்ந்து விஜய் பங்கேற்ற பின்னர் மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட இருக்கிறார்.

கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் விஜய் மாதந்தோறும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் கட்சியில் புதிதாக இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இணைப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com