

நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சின்னத்திரை நடிகை லதா ராவ் வெளியிட்ட வீடியோ பதிவைத் தொடர்ந்து, விமான நிலைய நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது. அவசரத்தில் கைவசம் சானிட்டரி நாப்கின் எடுத்து வரத் தவறியதால், உடனடியாக அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் விசாரித்தபோது, கழிவறைகளில் முன்னர் இருந்த தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முனையத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையில் உள்ள மருந்தகத்திற்கு விரைந்து சென்று நாப்கின் வாங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் விமானத்தில் ஏறுவதற்கே தாமதமாகும் நிலை உருவானது.
இந்த அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்து லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். பெண்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இடமான பன்னாட்டு விமான நிலையத்தில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் முடங்கிக் கிடப்பது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியது.
நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பெண் பயணிகளின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய உடனடி தற்காலிக ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த எண்ணை அழைத்தால், அடுத்த 2 நிமிடங்களுக்குள் விமான நிலைய பெண் ஊழியர் நேரடியாக வந்து சானிட்டரி நாப்கினை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக ஏற்பாட்டைத் தொடர்ந்து, நிரந்தர தீர்வாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் மொத்தம் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஒருவர் துணிச்சலாக எழுப்பிய புகாருக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.