

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சட்டப்பூர்வ உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்றும், இதற்கெதிராகவும் 'இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய பெயர்ப்பலகைகளின் வடிவமைப்பு, எழுத்துரு மற்றும் வண்ணங்களை மாற்றி அமைப்பதற்கு கணிசமான தொகையும் கூடுதல் அவகாசமும் தேவைப்படுவதாகக் கூறி 3 மாத கால அவகாசம் வழங்கக் கோரினார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்கத் தவறினால், சட்டப்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். மேலும், இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.