

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் அனிஷ் அகமது என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் கடையின் பின்பக்கம் உள்ள சமையலறையில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் பூட்டியிருந்த பிரியாணி கடையின் ஷட்டர் கதவுகள் உடைந்து பறந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அசோக் நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நரேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பிரியாணி கடையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த பிரிட்ஜ், நாற்காலிகள், மேஜைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.