

வீடியோ அழைப்பு மூலமாக அவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்த அந்த கும்பல் கடந்த 4 நாட்களாக வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றனர்.
கோவை மாவட்டத்தில் இணைய தள மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் முதியவரை 4 நாட்கள் மர்ம நபர்கள் சிறைவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த முதியவரை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட கும்பல், மத்திய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரிகள் பேசுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
மேலும் அவரது ஆதார் அட்டை பல்வேறு மோசடி செயல்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது செல்போன் மூலமாக ஆபாச வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் முதியவரின் வங்கி கணக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன் படுத்தப்பட்டிருப்பதாக கூறி, அவரை ‘டிஜிட்டல் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
வீடியோ அழைப்பு மூலமாக அவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்த அந்த கும்பல் கடந்த 4 நாட்களாக வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றனர்.
இந்நிலையில் வங்கிக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறிய அந்த முதியவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு பதற்றத்துடன் சென்றார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் 4 நாட்களாக டிஜிட்டல் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
முதியவர் போலீஸ் நிலையத்துக்கு வந்ததால் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.1 கோடி தப்பியது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஓய்வூதியம் மற்றும் வாழ்நாள் சேமிப்பை வங்கியில் வைத்துள்ள முதியவர்களே இதுபோன்ற சைபர் குற்றவாளிகளின் பிரதான இலக்காக மாறுகின்றனர். நவீன தொழில்நுட்பம் மற்றும் சைபர் குற்றங்களின் நுணுக்கங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மூத்த குடிமக்களிடையே இல்லாததே இந்த தொடர் ஏமாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டாலும், அச்சம் மற்றும் லாப ஆசை காரணமாக பலர் ஏமாந்து போகின்றனர். ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது செல்போனில் தடைசெய்யப்பட்ட பதிவுகள் பார்க்கப்பட்டதாகவோ சீருடை அணிந்த நபர்கள் வீடியோ அழைப்பில் மிரட்டினால், பொதுமக்கள் அச்சப்படாமல் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு உள்ளூர் போலீஸ் நிலையத்தை அணுக வேண்டும்.
இதேபோல, வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுக்கள் வாயிலாக அறிமுகமாகும் ஆன்லைன் பங்குச்சந்தை வர்த்தக திட்டங்களை ஒருபோதும் நம்பக்கூடாது. பங்குச்சந்தை முதலீடுகளை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் வங்கிகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மோசடி கும்பல் பணத்தை எடுப்பதற்குள் முதல் சில மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் புகார்கள் மட்டுமே பணத்தை முடக்கி முழுமையாக மீட்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.