

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாலும், பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதாலும் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்கள் குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தற்போது அரசால் அமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைப்பாளர் குழு’ மூலம் பல்கலைக்கழகங்களின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாக மற்றும் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நடைமுறை பயனுள்ளதாக இல்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முழுநேரத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகும்.
இதுவே பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைச் சீராகவும், கல்விச் செயல்பாடுகளைத் தடையின்றியும் முன்னெடுத்துச் செல்ல உதவும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர ஆலோசனையின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.
அவை பின்வருமாறு;
தேடல் மற்றும் தேர்வுக் குழுவில், வேந்தரின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் மாநில அரசின் பிரதிநிதி ஒருவர் இடம்பெறலாம்.
இது, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கும் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள், நேர்மை மற்றும் தொழில்முறைத் தகுதியால் அறியப்பட்ட, சிறந்த கல்வியாளர்களாகவும், நிபுணர்களாகவும் இருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
இக்குழு பதவி காலியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே தேர்வு நடைமுறைகளைத் தொடங்க வேண்டும். குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பணி நியமன விளம்பரம் வெளியிடப்பட வேண்டும்.
விளம்பரம் வெளியான 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நேர்காணல்களை முடிக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் ஒருமனதாகத் தீர்மானித்து, தகுதியான 3 நபர்களை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்திப் பரிந்துரைக்க வேண்டும்.
இதன்மூலம் விரைவான ஒரு தீர்வை எட்ட முடியும் என்றும், “பல்கலைக்கழகங்களின் நலனையும், பட்டமளிப்பு விழாவிற்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்ட நடைமுறையைச் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைவுபடுத்தவும் உங்கள் தனிப்பட்ட தலையீட்டை வேண்டுகிறேன்” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.