பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ., பாவம் - மாணிக்கம் தாகூர்!

அருள் விக்னேஷ் தரப்பு விளக்கத்தையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ., பாவம் - மாணிக்கம் தாகூர்!
Published on: 

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் முதல் கல்வி மந்திரி அபுல்கலாம் ஆசாத், முன்னாள் மத்திய மந்திரி மரகதம் சந்திரசேகர் ஆகியோரது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அவர்களது உருவ படங்களுக்கு மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தை விடவா?

தமிழ்நாட்டின் காவல்துறை கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. பண்டிகை காலத்தில் அதிக அளவில் கொலைகள் நடந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் கடந்த ஆண்டுளில் என்னென்ன நடந்தது? என்பதையும் பார்க்க வேண்டும். அதே நேரம் காவல்துறையின் பொறுப்பும் அதிகரித்து உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் தட்டி கழிக்க கூடாது. கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார்.

அப்படியானால் யோகி ஆதித்யநாத் என்றோ ராஜினாமா செய்து இருக்க வேண்டுமே, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் நடக்காத நிகழ்வுகளா இங்கே நடக்கிறது.

எங்களை பொறுத்தவரை முன்பு எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போது எங்கள் கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வந்தோம். இப்போது கூட்டணியில் இருக்கிறோம். எந்த விவகாரத்தை யாரிடம் எப்படி சொல்ல வேண்டுமோ அதை சொல்லி வருகிறோம்.

முதல் தலைமுறை எம்.எல்.ஏ.

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் வாட்ஸ் அப்பில் வந்த தகவல்களை அடிப்படையாக வைத்து கிளப்பி விடப்பட்டது. ஊடகங்களும் அதை பெரிதுப்படுத்தி உள்ளன.

அந்த எம்.எல்.ஏ. முதல் தலைமுறை எம்.எல்.ஏ., அனுபவம் இல்லாதவர், தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் தரப்பு விளக்கத்தையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம்.

அதே நேரம் தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் அனுப்பியதாக கூறப்படும் குறுஞ்செய்தியையும் உதயநிதி ஸ்டாலின் பேசியதையும் ஒப்பிடக்கூடாது.

உதயநிதி பொதுமக்கள் மத்தியில் பேசியது அயோக்கியத்தனமானது. அருவருக்கத்தக்கது. அவர் பேசியதற்கு சாட்சி உள்ளது. ஆனால் த.வெ.க. எம்.எல்.ஏ. அனுப்பியதாக கூறப்படும் குறுஞ்செய்திக்கு என்ன ஆதாரம் உள்ளது?

திமுக விஞ்ஞான ஊழல்

அதேபோல் துணை சபாநாயகர் விவகாரத்திலும் போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி நூல்கள் விவகாரத்தில் கடந்த 6 மாத காலமாக நூலகங்களுக்கு ஒரு புத்தகம் கூட வாங்க வில்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்து உள்ளார்.

ஆனால் அ.தி.மு.க. பொய்யான தகவல்களை பரப்புகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்துள்ளது.

இது தி.மு.க.வின் 2.0 ஊழல். பல நூலகங்களில் இதே போல் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது. இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க.வினரின் பங்கு என்ன? அவர்கள் வாங்கிய ‘பங்கு’ எவ்வளவு? என்பது வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயிலில் இருக்கிறார்.

அவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரத்தில் முழு ஊழல் விவகாரமும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X