

சட்டசபையில் வீட்டு வசதி துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சோழவந்தான் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா பேசுகையில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பணம் செலவழிக்க தேவையில்லை என்றும், அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார். அப்போது ஜல்லிக்கட்டு குறித்து பேசிய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவரது கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், த.வெ.க. எம்.எல்.ஏ.வின் பேச்சை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கருப்பையா எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார். இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து பேரவையில் பேசியது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் என்னிடம் விளக்கத்தை கேட்டார்கள். மேலும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பிலும் இது குறித்து கடிதம் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.
பேரவையில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருப்பையா பேசிய குறிப்பிட்ட வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தவறான அர்த்தத்தில் பேசவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா என்னிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து கருப்பையா எம்.எல்.ஏ. எழுந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க முயன்றார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கிடையாது என கூறி கருப்பையா எம்.எல்.ஏ. பேச அனுமதி மறுத்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.