முதல்முறையாக களமிறங்கும் தவெக: தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி வரும் 13, 14-ல் இந்தியா கூட்டணி போராட்டம்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 INDIA alliance
Published on: 
Summary

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, தன்னிச்சையாகச் செயல்பட்டு ஏராளமான வாக்காளர் பெயர்களை நீக்கியதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது எதிர்க்கட்சிகள் தீவிர குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணியில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்தியா கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து, சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதன்முறையாகப் பங்கேற்றுள்ளது.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, தன்னிச்சையாகச் செயல்பட்டு ஏராளமான வாக்காளர் பெயர்களை நீக்கியதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது எதிர்க்கட்சிகள் தீவிர குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, காந்தி ஜெயந்தி அன்று ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் முயன்றன. இருப்பினும், உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாகக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டம் அறிவிப்பு

13 & 14ம் தேதி: தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தும்.

15ம் தேதி: தலைநகர் சென்னையில் மாநில அளவிலான பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் நேரில் பங்கேற்று உரையாற்றுவார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, த.வெ.க. முதன்முறையாக இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்றது. த.வெ.க. சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஆதரவைப் பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) பல்வேறு குளறுபடிகளும், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கவும், வாக்காளர்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்த போராட்டங்களை தீவிரப்படுத்தவுள்ளதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com