Tamil News Live: சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில்- 27 ஆகஸ்ட் 2026

சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.

சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை

சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com