

தமிழ்நாட்டில் பார்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று தனி நபர்கள் இவற்றை நடத்தி வருகின்றனர். கடைசியாக, கடந்த 2023-ம் ஆண்டு பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்தக் காலம் கடந்த 2025 டிச.31-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து பார்களுக்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘பார்’ அமைக்க புதிய அனுமதி வழங்கும் வகையில் ‘பார்’ டெண்டர் விதிகளில் மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான அங்கீகாரத்தைத் தனியார் நபர்களுக்கு டெண்டர் மூலம் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார், டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது அந்தக் கடையிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள்ளோ அமைக்கலாம் என்றும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் பார் அமைக்கக் கூடாது. பிற பகுதிகளில் இந்தத் தூரம் 100 மீட்டராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி அல்லது நகரத் திட்டமிடல் ஆணையங்களால் வணிகப் பகுதியாகவோ தொழிற்பகுதியாகவோ அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இந்தத் தூரக் கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பார் அமைவிடத்திற்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் அவசியம். ஏற்கெனவே பார் அமைந்த பிறகு அந்த இடத்தில் வழிபாட்டுத் தலமோ கல்வி நிறுவனமோ உருவானால், மேற்கண்ட தூரக் கட்டுப்பாடு பொருந்தாது.
குறிப்பிடப்பட்ட மலைப் பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டப்பகுதிகளில் பார்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்களின் அடிப்படை வசதிகளை பொறுத்தவரையில், ஒவ்வொரு பாரும் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைத்தளப் பரப்பளவு கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் வாஷ்பேசின் வசதிகள் கட்டாயம் என்றும், பார் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்துவதற்குப் போதுமான மேஜைகள், நாற்காலிகள் இருக்க வேண்டும் என்றும், பாருக்குள் மதுபானம் அருந்துவது வெளியில் இருந்தோ அல்லது விற்பனை செய்யும் கடையிலிருந்தோ தெரியாத வகையில் மறைப்புத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்களில், மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு. பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பார் இயங்க வேண்டும். இரவு 10 மணிக்கு பிறகு பாரில் யாரும் இருக்கக்கூடாது. மதுக்கடையிலும் மதுக்கூடத்திலும் வேறு எந்த நேரத்திலும் வியாபாரம் நடைபெறக்கூடாது. 21 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்கக் கூடாது.
21 வயதிற்கு உட்பட்ட நபர்களை பாருக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களை பாரில் பணியமர்த்தவும் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்கள் மற்றும் அரசு அறிவுறுத்தல் படி அறிவிக்கும் விடுமுறை நாட்களில் பார்களை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்களை, கோட்ட ஆயத்தீர்வை அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வட்டாட்சியர் பதவிக்குக் குறையாத வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்யலாம்.
ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடத்த அனுமதி பெற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.