டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: தமிழக அரசு

மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. "மதராசி முகாம்" குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும்.
டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: தமிழக அரசு
Published on

டெல்லி ஜங்க்புரா பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது.

மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. மதராஸி முகாமில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"மதராசி முகாம்" என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரெயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

டெல்லி ஐகோர்ட்டு, "மதராசி முகாம்" என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம்/ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது.

எனவே, டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரிய சட்டம் மற்றும் டெல்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, குடியிருப்பாளர்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பு, தகுதி தீர்மானக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயல்முறை அடிப்படையில், 370 குடியிருப்பாளர்களில் 215 பேர் தகுதியுடையவர்களாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகுதியுடைய பயனாளர்களுக்குத் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கான (EWS) குடியிருப்பு யூனிட்டுகள், நரேலா, டெல்லியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், "மதராசி முகாம்" குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் தில்லி உயர்நீதிமன்றத்தால் 09.05.2025 தேதியிட்ட உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவின் படி, 01.06.2025 முதல் "மதராசி முகாம்" பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மதராசி முகாம்" பகுதியில் அனுமதியில்லாத கட்டிடங்களை இடிக்காமல் இருக்க குடியிருப்பாளர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, புதுடெல்லியில் உள்ள "தமிழ்நாடு இல்ல" அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, "மதராசி முகாம்" குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

"மதராசி முகாம்" குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com