

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வை திரும்பப் பெற்று பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடந்த 2021-ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய பின்பும் ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு, நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்த தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.
மற்றொரு தீர்மானமாக, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.