

பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி மாற்று கட்சிகளிலும் இணைந்தனர். மேலும் கட்சியினரிடமும் சோர்வு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி ஆலோசிப்பதற்காக நேற்று செயற்குழுவை கூட்டி விவாதித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தொடர் தோல்விக்கான காரணங்கள், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு கருத்துக்களை நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது நிறைய உறுப்பினர்கள் இந்த கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செயற்குழு கூட்டம் முடிந்ததும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். இருப்பினும் அந்த கட்சிகளுடன் எந்த சண்டையும் கிடையாது. நட்புடனேயே விலகுகிறோம் என்றார்.
அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும். அதிலாவது பிரதிநிதிகள் வெற்றி பெற்றால்தான் கட்சியை பலப்படுத்த முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இதை மனதில் கொண்டு கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர். இப்போதைய நிலையில் த.வெ.க. மற்றும் தி.மு.க. ஆகிய 2 வாய்ப்புகள்தான் உள்ளன. ஆனால் த.வெ.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதால் அங்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லை.
தி.மு.க.வை பொறுத்த வரை அந்த அணியில் இடம்பெற்று இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் அந்த அணியை விட்டு வெளியேறி த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கின்றன.
எனவே தி.மு.க. அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு உள்ளன. எனவே அந்த அணியில் இடம் பிடிப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. வருகிற 24-ந்தேதி அல்லது அதற்கு பிறகு இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.