

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து விவசாயி. இவரது மனைவி பானுமதி.
இவர்களுக்கு அர்ச்சனா, அபிநயா என 2 மகள்களும், ஆகாஷ் (வயது 21) என்ற மகன் உள்ளனர். பிச்சமுத்துவும், பானுமதியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆகாஷ் ஆரணி அருகே உள்ள தச்சூர் சமத்துவபுரம் கிராமத்தில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். ஆகாசுக்கு திருமணமாகி ஜெயபிரியா என்ற மனைவியும், 10 மாத கைக்குழந்தை உள்ளன.
இந்த நிலையில் தந்தை, மகனுக்கு ஏற்கனவே குடும்ப சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் போலீசார் சமரசம் செய்து வைத்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பிச்சமுத்து தனது மகன் கடைக்கு சென்று மது வாங்கிதா என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் இரவு தனியார் மண்டபம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தந்தை, மகன் இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் சொத்து சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் ஏற்கனவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பிச்சமுத்து பரிதாபமாக இறந்தார். ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் பிச்சமுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.