தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை வலியுறுத்தல்

ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.
Annamalai
Published on: 

திருப்பரங்குன்றம் தூண் விவகாரத்தில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது, அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பு அல்ல, நீதிமன்றம் அதை மாற்றியமைக்கும் வரை, அந்த உத்தரவு அரசுக்கும், அதன் அதிகாரிகளுக்கும், சட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து சட்டப்பூர்வ அல்லது மத நிறுவனங்களுக்கும் கட்டுப்பட்டதாகும் என்றும்,

தமிழக அரசு இனிமேலாவது நீதிமன்ற உத்தரவுகளை மீறும் செயல்களைக் கைவிட வேண்டும்; சட்டத்தின் ஆட்சி என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல என்றும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.

இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X