

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று
(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக
சாலைக்கு எழுந்தருளுனார்.
7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கின்றது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை, மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர்.
வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதியில் பவனி வருகிறார்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை யாகசாலையில் நடைபெறும் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார்.
கடற்கரையில் அவர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
7-ம் திருநாளான 16-ந் தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்தசஷ்டி விழா தொடங்குவதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று காலை முதலே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குவியத்தொடங்கினர். அவர்கள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.