தவெகவை நம்பியவர்கள் நட்டாற்றில் நிற்க போகிறார்கள்- மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தவெகவினரின் திமிரையும் அகம்பாவத்தையும் இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் அடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
M.K.Stalin
Published on: 
Summary

போதைப்பொருள் தொடர்பாக துப்புக் கொடுத்தவர்களைக் கூட காப்பாற்ற இந்த அரசுக்குத் துப்பில்லை என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பாதியளவிற்கும் மேல் தவெகவைச் சேர்ந்தவர்களே உள்ளனர்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

திணிக்கப்பட்ட தேர்தல்

பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்று என்றும், தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல் என்றும் குறிப்பிட்டார். குறுக்கு வழியில் எம்எல்ஏக்களை வாங்குவதுதான் முதலமைச்சர் விஜயின் புத்தி. பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்காகவே முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

அப்பட்டமாக நடைபெற்ற குதிரை பேரத்தின் காரணமாகவே இந்த இடைத்தேர்தல் நடப்பதாகவும், ராஜினாமா செய்துவிட்டுத்தான் கட்சி மாறியதாக கூறும் விஜய்யின் கூற்று ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றும், ராஜினாமா செய்யாவிட்டால் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்பதாலேயே அவர் அவ்வாறு செய்துள்ளார் என்றும் எள்ளி நகையாடினார்.

உங்கள் பயம் எனக்கு பிடித்திருக்கிறது

தவெக தலைவர்களின் பேச்சைக் குறிப்பிட்ட ஸ்டாலின், தவெகவினரின் திமிரையும் அகம்பாவத்தையும் இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் அடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "நாயை நிற்க வைத்தால் கூட வெற்றி பெறுவோம்" என்று ஆளுங்கட்சியினர் திமிராகப் பேசி வருவதாகவும், மக்களை ஏமாற்றும் தவெகவுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தலுக்கு முன்பாக தவெகவை ஒரு பொருட்டாகக் கருதாமல் விட்டதே திமுக செய்த தவறு எனக் குறிப்பிட்ட அவர், கொள்கை எதிரிகளை எதிர்கொண்ட எங்களுக்கு இந்த கோமாளி கூட்டம் ஒரு பொருட்டே அல்ல என்றும், எங்களை வழக்குப் போட்டும் மிரட்ட முடியாது, சூட்கேஸ் காட்டியும் விலைக்கு வாங்க முடியாது. உங்கள் பயம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது. குதிரை பேரம் கழுதை பேரம் இல்லை என முதலமைச்சர் உத்தமர் போல் கூறுகிறார். விஜயின் பேச்சை சில தற்குறிகள் நம்புகிறார்கள், வாழ்க்கை ஒரு வட்டம் என்பது முதலமைச்சருக்கு சூப்பராக பொருந்துகிறது என முதலமைச்சர் விஜயைச் சாடினார்.

சீர்குலைந்த சட்ட ஒழுங்கு

மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் தினந்தோறும் கொத்துக்கொத்தாகக் கொலைகளும் அரிவாள் வெட்டுகளும் நடைபெற்று வருவதாகக் கவலை தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பாக துப்புக் கொடுத்தவர்களைக் கூட காப்பாற்ற இந்த அரசுக்குத் துப்பில்லை என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பாதியளவிற்கும் மேல் தவெகவைச் சேர்ந்தவர்களே உள்ளனர் என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தவெகவை நம்பியவர்கள் நட்டாற்றில் நிற்க போகிறார்கள், பச்சைக் குழந்தைகள் குடிக்கும் ஆவின் பாலைக் கூட ஒழுங்காக விநியோகிக்க முடியாமல், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியாமல் தவெக அரசு திணறி வருவதாகச் சாடினார்.

சீப் மினிஸ்டர் விஜய்

பிரசாரத்தின் போது முதல்வரின் நடவடிக்கைகளைக் கேலி செய்த ஸ்டாலின், "இனிமேல் விஜயை முதலமைச்சர் என்று சொல்ல மாட்டேன், 'சீப் மினிஸ்டர்' என்றுதான் சொல்வேன்" என்றார். டீ குடிப்பது போல மதுராந்தகத்தில் வந்து ஷூட்டிங் நடத்திய விஜய்க்கு ஒரு டீயின் நிஜ விலை என்னவென்று தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

ஒரு டீக்கு 500 ரூபாய் கொடுத்து பந்தா செய்யும் முதல்வருக்கு மக்களின் கஷ்டம் புரியாது என்றும், தவெகவை நம்பியவர்கள் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார். கருரீல் சென்று பாட்டுபாடிய விஜய் அங்கு ஏன் வெற்றி பெறவில்லை. மேலும், டெல்லியில் விஜய் யாருடன் ரகசியக் கூட்டணியில் இருக்கிறார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும், திமுக ஜெயித்தாலும் தோற்றாலும் கெத்தாக மக்களுக்கு தொடர்ந்து பாடுபடும் என்றும் உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com