

திருப்போரூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, குன்றத்தூர், வடபழனி முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெறுகிறது.
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருத்தணி கோவிலில் மட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சுமார் 3 டன் மலர்களால் சண்முகபெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை திருத்தணி மலைக்கோவில் உள்ள காவடி மண்டபத்தில் முருகப் பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள், குங்குமம் மற்றும் தாலி வழங்கப்பட்டன.
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் அறக்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் நித்யா, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன், பி.ஆர்.ஓ.க்கள் அன்பழகன், தாமோதரன் உள்பட பலர் கலந்துக் ககொண்டனர்.
இதேபோல் திருப்போரூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, குன்றத்தூர், வடபழனி முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெறுகிறது.