

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று அங்குள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் முக்கிய அரசியல் கட்சிகள் வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல்லில் உள்ள இந்து அமைப்பு தலைவர்களும் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒய்.எம்.ஆர். பட்டி மெயின் ரோட்டில் உள்ள பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன், லட்சுமணரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார், பாரதிபுரம், மீனாட்சி புரத்தில் உள்ள பாரதிய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மலைக்கோட்டை தர்மா, குமரன் திருநகரில் உள்ள இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகன் ஆகியோர்களை வீடுகளில் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் முக்கிய நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வுக்கு செல்வதை தடுக்க எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் திண்டுக்கல்லில் பழமையான தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோட்டைக்கும் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.