தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து நிற்பது அவர்களுக்கான உரிமை சுதந்திரம்- திருமாவளவன்

2 தொகுதிகளும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம்.
Thirumavalavan
Published on

தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம் உப்பளம் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களை சந்தித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இதில் உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ் சண்முகவேல்,சிவாகர் பால்ராஜ், பாலசுப்ரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பு தொழில் செய்யும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க ஹூண்டாய் தென்கொரிய நிறுவனம் தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உப்பள தொழிலாளர்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. தமிழ்நாடு அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. இதை முதலமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம்.

இடைத்தேர்தல்

இடதுசாரி கட்சிகள் தொடக்கத்தில் இருந்து த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறி வந்தார்கள். அதன் அடிப்படையில் ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு.

ஆனால் நாங்கள் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்து நிற்போம் என்று 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.

இது அவர்களுக்கான உரிமை சுதந்திரம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். இந்த 2 தொகுதிகளும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம்.

ஆ.ராசா பேச்சு

தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.வின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.

அவர் இதுபோன்ற உரையை ஆர்ப்பாட்டத்தில் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது தி.மு.க.வுக்கு எதிராக போய் முடியும்.

அண்மையில் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடிய வகையில் எங்கள் இயக்கத் தோழர்கள் பேச மாட்டார்கள், அந்த மாண்பு பாதுகாக்கப்படும் பொருளில் பேசி இருந்தார்.

ஆனால், ஆ.ராசா மற்றும் முன்னணி தலைவர்கள் ஆர்ப்பாட்ட உரை என்பது முதலமைச்சரையே ஓருமையில் பேசுவது மற்றும் அவர்களின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது எல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் பேச்சாக தெரியவில்லை.

தி.மு.க. மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com