

திரையரங்குகளில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அதிகபட்ச டிக்கெட் விலையை ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம், சொத்து வரி, பணியாளர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாலும், ஓடிடி தளங்களின் கடுமையான போட்டியாலும் திரையரங்குகளின் இயக்கம் பெரும் பொருளாதாரச் சிக்கலை சந்தித்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், திரைத் துறையை மீட்டெடுக்கவும், தியேட்டர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து விளக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அதிகபட்ச டிக்கெட் விலையை ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், தியேட்டர்களில் டிஜிட்டல் புரொஜெக்டர் இயக்குவதற்கு உரிமம் பெற்ற ஆபரேட்டர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற பழமையான விதியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகப் பணிகளை எளிதாக்கும் வகையில் திரையரங்குகளுக்கான சி-ஃபார்ம் உரிமத்தை ஆண்டுதோறும் அலைச்சலுக்குப் பிறகு புதுப்பிப்பதற்குப் பதிலாக, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே புதுப்பிக்கும் வகையில் சட்டதிட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாகவே 10 சதவீத டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அரசு தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவின் கீழ் தகுதியுள்ள திரையரங்குகளை இணைத்து, வணிகரீதியான கட்டணங்களுக்கு மாற்றாகக் குறைந்த மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திரையரங்க வளாகங்களுக்குள்ளேயே கூடுதல் திரைகள் அமைப்பதற்கான அனுமதிகளை எளிய முறையில் துரிதமாக வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பொதுமக்கள் மற்றும் திரையுலகின் நீண்ட நாள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், திரையரங்குகளில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைத் திரையில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். மேலும், திரையரங்குகள் செயல்படும் நேரமானது தற்போதுள்ள காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என்பதற்குப் பதிலாக, காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை முழுமையாக நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், எனினும் தினமும் அதிகபட்சம் 5 காட்சிகள் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.