

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் புதிய இடையீட்டு மனுக்கள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, அவசர வழக்காக இந்த விவகாரத்தை விசாரிக்க முறையிடப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் நாளை பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 20ம் தேதி இதே அமர்வு, நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு, தீபத் திருநாளுக்குப் பின்னர் மூன்று நாட்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நவம்பர் 24ம் தேதி தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள வழக்கமான தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
கோயிலின் மரபு மற்றும் வழக்கமான நடைமுறைகளின்படி தீபம் ஏற்றப்பட வேண்டிய இடம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபம்தான் என்றும், தீபத்தூண் என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சர்வே கல் என்றும் கோயில் அறங்காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே மீறியதாகக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் விஜய் அல்லது அமைச்சர்கள் யாரேனும் உத்தரவிட்டார்களா? என்பது குறித்த விவரங்களை வெளியிடவும் மனு ஒன்றில் கோரப்பட்டுள்ளது.