

திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபல்ல; அருகில் தர்கா இருப்பதாலும், அமைதிக்கு குந்தகம் விளைக்கும் என்பதாலும் அந்தக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று பதில் அளித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த பதிலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“வரலாற்றையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் புறக்கணித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் ஜோசப் விஜய் அரசுக்குக் கண்டனம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபல்ல என்றும், கார்த்திகை தீபத்தன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது முருக பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
1923-ஆம் ஆண்டில் தர்கா மற்றும் படிக்கட்டு தவிர மலை முழுவதும் முருகனுக்கே சொந்தம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், அதனை 1931-இல் பிரிவி கவுன்சில் உறுதி செய்ததையும் வரலாறு தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
இத்தனை வரலாற்றுச் சான்றுகளும், சட்டப்பூர்வ உரிமைகளும், சமூக நல்லிணக்கமும் ஒருங்கே அமைந்திருந்தும், ஜோசப் விஜய் அரசு கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எதிர்மறைப் பதில் மனுவைத் தாக்கல் செய்திருப்பது அதன் இரட்டை வேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.
எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய் இனியும் பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள பக்தர்களுக்கு எதிரான பதில் மனுவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
1923-ஆம் ஆண்டுத் தீர்ப்பு முதல் தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் ஆன்மிக மரபுகளையும், நீதிமன்ற உத்தரவையும் மதித்து, எதிர்வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று எவ்விதத் தடையுமின்றித் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.