‘107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்ததன் விளைவு’ - அமைச்சர் ஆனந்தின் சர்கார் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி!

“பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே” என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
‘அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்ததன் விளைவு’ - அமைச்சர் ஆனந்தின் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி!
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் ஆனந்த், விஜய் நடித்த சர்கார் படப்பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஆனந்தின் இந்தப் பேச்சுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,

“விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அஇஅதிமுக குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம்!

நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அதைத் தவிர எல்லாவற்றையும் பேசினார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.

அவர் அவரது கட்சி குறித்தும், அவரது தலைவர் குறித்தும் பேசியது பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. பிளாக் டிக்கெட் வித்தது எல்லாம் ஒரு வரலாறா? என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதும் இல்லை.

ஆனால், தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதற்கான எதிர்வினையை நிச்சயம் அவர் எதிர்கொள்ள வேண்டும்.

அதாவது, சர்கார் திரைப்பட பேனர்களை கட்சித் தொண்டர்கள் கிழித்ததால் தான் அஇஅதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லையாம். அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்து இருப்பதால் இந்த அலங்கோலத்தை கேட்கும் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

உலகில் வாழும் தமிழர்கள் உள்ளமெல்லாம் வீற்றிருக்கும் உன்னதத் தாய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி, தவறான வகையில் அரசியல் ரீதியாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பார்களா என்ன?

அப்போதும் சரி,

இப்போதும் சரி,

எப்போதும் சரி,

எங்கள் இதயதெய்வங்களை பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இந்த இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான்! அவனது அரசியல் எதிர்வினை, எதிரிகளின் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடும்!

அதே சர்கார் படத்தில் நீங்கள் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த “அம்மா லேப்டாப்”களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள்? அன்று பழித்து பேசிய ஜெயலலிதாவின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத் திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லையா?

2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் சாதாரான எண்ணப்படி தான் எங்கள் வெற்றி வாய்ப்பு நழுவியது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம்.

அதனால், “பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே” என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே..!!

(பி.கு. : சர்கார் பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம்- அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் இலவச விளம்பரம் கிடைத்ததற்காக..!!)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com