

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 3-வது இடம்பிடித்த த.வெ.க., இசக்கி சுப்பையாவின் வருகைக்கு பின் இந்த இடைத்தேர்தலில் மிக தீவிரமாக களம் இறங்குகிறது.
நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதியில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
இந்நிலையில் அவர் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து அம்பை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இடைத்தேர்தல் அந்த தொகுதிக்கு அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.
இந்த இடைத்தேர்தல் களம் தமிழக அரசியலில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 3-வது இடம்பிடித்த த.வெ.க., இசக்கி சுப்பையாவின் வருகைக்கு பின் இந்த இடைத்தேர்தலில் மிக தீவிரமாக களம் இறங்குகிறது. இடைத்தேர்தல் நடந்தால் அம்பாசமுத்திரத்தில் த.வெ.க நிச்சயமாகப் பெரும் வெற்றி பெறும் என்று இசக்கி சுப்பையா சவால் விடுத்துள்ளதால் அக்கட்சியின் பலத்தை நிரூபிக்கும் முக்கிய களமாக இது மாறியுள்ளது.
தொடர்ந்த அவர் கடந்த 1 மாத காலமாகவே தொகுதியில் பல்வேறு இடங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார். அதேபோல் தொகுதியில் மொத்தம் உள்ள 321 பூத்துகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களான அயன்சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வீரவநல்லூர், வி.கே.புரம், வெள்ளாங்குழி, அரிகேசவநல்லூர் சுற்றுவட்டாரத்தில் விசில் சின்னத்துடன் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகிறது. அம்பை தொகுதில் த.வெ.க. சார்பில் எந்த வேட்பாளரை அறிவித்தாலும், அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சி நிர்வாகிகள் மார்தட்டி பேசுகின்றனர்.
அதேநேரம் தங்களின் கோட்டையாக கருதப்படும் அம்பாசமுத்திரத்தில், தங்களை ஏமாற்றிவிட்டு சென்ற இசக்கி சுப்பையாவுக்கும், த.வெ.க-வுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆங்காங் கே பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. ஆனாலும் த.வெ.க.வின் முகமாக இசக்கி சுப்பையா இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வில் இதுவரை எந்த நிர்வாகியும் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணிகளை தொடங்காமல் இருப்பதால் சற்று பின்னடை வாகவே பார்க்கப்படுகிறது.
அதேநேரம் தி.மு.க.வை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் காட்டும் வேகம் களத்தில் இல்லை என்றே கூறலாம். த.வெ.க. தொகுதியில் காட்டும் வேகத்தில் உள்ள குறைபாடுகளையும், இசக்கி சுப்பையாவை விமர்சித்தும் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் அமைதியான முறையில் தொகுதியிலும் பிரசாரம் செய்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.