அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 மாணவர்களுக்கு உடலில் தட்டணுக்கள் குறைந்தது - பரிசோதனையில் தகவல்

மாணவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை, உண்ணி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 மாணவர்களுக்கு உடலில் தட்டணுக்கள் குறைந்தது - பரிசோதனையில் தகவல்
Published on
Summary

அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் பரிசோதனை முடிவு வெளியானதில் அதில் 20 பேருக்கு ரத்த தட்டணுக்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி படித்த 4-ம் ஆண்டு என்ஜினியரிங் மாணவர் ஹரிஷ் குமார் 4 நாட்களாக நீடித்த அதிக காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

மாணவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை, உண்ணி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுகாதார மையம் முறையாக செயல்படவில்லை. அங்குள்ள பணியாளர்கள் காய்ச்சல் பாதித்த மாணவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளவில்லை, அவர்களது கவனக்குறைவால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அதில் சிலருக்கு 4 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்ததால் ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சுகாதார மையத்தை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு செய்து அங்கு சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.

சுகாதார நல அதிகாரிகள் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் மற்ற நேரங்களில் கண்டு கொள்வது இல்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் பரிசோதனை முடிவு வெளியானதில் அதில் 20 பேருக்கு ரத்த தட்டணுக்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அணுக்கள் அதிகரிப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை சொந்த ஊருக்கு செல்லுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிலர் செல்ல விரும்பாததால் இங்கேயே சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கிடையில் உண்ணி காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com