

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் ரகுபதி செயல்பாடுகளை பட்டியலிட்டார்.
சட்டபேரவையில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குவதற்கான தனிதீர்மானத்தை ஒட்டி பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி ,தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததே எங்கள் தலைவர் கலைஞர் தான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தன்னுடைய ஆட்சியில் 2006ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி பிள்ளையார் சுழி போட்டவர் கலைஞர் தான் என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்திருந்தார் என்று திமுகவின் செயல்பாடுகளை குறிப்பிட்டார்.
குறிப்பாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பங்கேற்றபோதுஅன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக முன்வைத்தார் என்று தெரிவித்தார்.