செங்கிப்பட்டி அருகே இன்று கோர விபத்து: மினிலாரி மோதி பாதயாத்திரை பக்தர்கள் 5 பேர் பலி

மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது. விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கிப்பட்டி அருகே இன்று கோர விபத்து: மினிலாரி மோதி பாதயாத்திரை பக்தர்கள் 5 பேர் பலி
Published on

வல்லம்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 6 பக்தர்கள் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி, கண்ணுக்குடிபட்டியில் இருந்து சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். பாதயாத்திரையாக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி (வயது 60), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனா, கார்த்திக் மனைவி மீனா (26) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், செல்வராஜ் மனைவி தனலட்சுமி (30), சங்கீதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனா உள்ளிட்ட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சங்கீதா, தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com